Elements of the Lifestyle of Petty Kings in the Ruling Class during the Sangam Period|Dr.D.Dhinesh

Abstract
               
           In Sangam Tamil Nadu there were small land kings next  to Vendras and Velirs. These petty kings were under the rule of the Vendras as their tax payers, and they themselves participated in politics and served as commanders of the Vendras in times of war. In this way, this article examines the places of small land owners and their living conditions in the ruling division of the Sangam period.


“சங்க கால ஆளும் பிரிவில் குறுநில மன்னர்களின்வாழ்வியல் கூறுகள்”

முன்னுரை
         
          சங்ககால தமிழகத்தில் வேந்தர், வேளிர்களை அடுத்து நிலையில் குறுநில மன்னர்கள் இருந்தனர். இக்குறுநில மன்னர்கள் வேந்தர்கள் ஆட்சிக்கு உட்பட்டு அவர்களுக்கு வரி செலுத்துபவராகவும், அவர்கள் அரசியலில் தாமும் பங்கேற்று, போர்காலங்களில் வேந்தர்களுக்கு படைத்தலைவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அவ்வகையில் சங்க கால ஆளும் பிரிவில் குறுநில மண்னர்கள் பெற்ற இடங்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் சூழல்களைப் பற்றி இக்கட்டுரை ஆராய இருக்கின்றது.

சங்க இலக்கியமும் குறுநில மன்னர்களின் மாட்சியும்
       ’குறுநில மன்னர்’ என்னும் தொடர்மொழியை நம் முன்னோர்கள் மிக விரிவான பொருளில் பயன்படுத்தியுள்ளனர். எனவே பல்வேறு இனக்குழுக்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள்,  வேளிர்கள், படைத்தலைவர்கள் முதலியோரைக் குறிப்பதற்கு வசதியான சுட்டுப்பொருளாக, இங்கு இத்தொடர்மொழி பயன்படுத்தப்படுகின்றது,  வரலாற்றுக் காலம் முதலே தமிழகம் சேர,  சோழ, பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. இம்மூவேந்தர்களோடு பல குறுநில மன்னர்களும் இனக் குழுக்களின் தலைமக்களாக விளங்கினர்.   ஆற்றுப்படை இலக்கியங்கள் இவர்களின் கொடைத்திறம் குறித்துச் சான்று பகர்கின்றன.

     இனக்குழுச் சமூகத்தின் அடியொற்றி வந்தவர்களே இக்குறுநில மன்னர்களாவர். சீறூர் மன்னர்களைப் போலவே வீரத்திலும் கொடைச்சிறப்பிலும் மேலோங்கிய இவர்கள் தொடர்ச்சியாக, சீறூர் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின் மேலெழுந்தவர்கள் ஆவர்.   இவர்கள் சீறூர் மன்னர்களைப்போல் அல்லாமல், படை வலிமையும், அரண் அமைப்புகளையும், சிறு எயில்களும் பெற்றுக் காணப்பட்டனர்.   புலவர்களிடமும், கலைஞர்களிடமும் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களுக்குக் கிடைத்த புகழையும் எழுச்சியையும் கண்டு வேந்தர்கள் ஐயம் கொண்டு,  வேந்தர்களின் நாடு கொள்ளும் ஆசையில் குறுநில மன்னர்கள் பலியாயினர்.   

          சங்ககாலச் சிற்றரசுகளின் தோற்றம் குறித்து அறிஞர்களிடையே பல  கருத்துவேற்றுமை இருந்து வருகின்றன.   எண்ணற்ற பழங்குடிச் சமூகங்கள் பேராற்றல் வாய்ந்த தலைவர்கள் தங்களின் கீழும், பலவகைப்பட்ட நிலக்கிழார்களின் கீழும் வாழ்ந்துவந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.   அதனை,

“ஆவியர் பெருமகன் பேகன்”  (சிறு.  86)
“குறவர் பெருமகன் ஏறை”     (புறம்.  157:7)
“கள்வர் பெருமகன் புல்லி”    (அகம்.  342:6)
“மழவர் பெருமகன் மாவள் ஓரி” (நற்.  52:9)
“மழவர் பெருமகன் அஞ்சி”    (புறம்.  88:3)
      மேற்கண்ட சங்ககாலக் குறுநில மன்னர்கள் முறையே அவர்களுடைய இனத்தவரின் அல்லது இனக்குழுவின் தலைவர்களாக (பெருமகன்) விளங்கியதை அறியமுடிகின்றது.கலைகளைப் போற்றுவதில் இவர்கள் சிறந்து விளங்கினர்.

செல்வத்துப் பயனே ஈதல் 
        தகுதியுடை கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும், வாழப்பிறந்த மனிதன் வறுமையால்  வாட்டமுற்று உயிர்விடக்கூடாது என்ற அருள் நெஞ்சமும் கொண்டவர்களாக இவர்கள் திகழ்ந்தனர்.  சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்கள்  ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற கொள்கையுடன் வாழ்ந்துவந்தனர்.  இவர்கள் புகழுச்சிக்காக எதனையும் செய்வதில்லை “இத்தகைய அருள் உள்ளத்தைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு வரலாற்று அறிஞர்,  “பாரி, முல்லைக்கொடிக்கு தேர்க் கொடுத்தது இன்றைய காலக்கட்ட மக்களுக்கு பொருளற்றதாகத் தோன்றும்”1 என்று தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  இங்கு ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளல் வேண்டும்.
     உயிர்களை மதித்து போற்றுதல் வேண்டும் என்ற உயரிய கொள்கையைச் சங்க கால மன்னர்கள் கடைப்பிடித்து வந்தமையால் பாரி தன் தேரினை முல்லைக்கொடிக்கு கொடை நல்கினான் எனப் புரிந்துகொள்ளல் வேண்டும்.   “காட்டில் கொழுகொம்பு இன்றிக் காற்றால் அலைப்புண்டு அல்லல்பட்ட முல்லைக் கொடிக்கு – வாயால் தன் துன்பத்தை எடுத்துரைக்க இயலாத முல்லைக் கொடிக்கு – புலவர்களையும்  பாணர்களையும் போல வாய்திறந்து பாட இயலாத முல்லைக்கொடிக்கு – தன்னுடைய மணியொலிக்கும் நெடுந்தேரினைக் கொழுக்கொம்பாகக் கொண்டு துன்பம் தவிர்க்குமாறு பாரி கொடுத்த செயல் எவ்வாறு பொருளற்ற செயலாகும்”2  என்ற கறுத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது.  

குறுநில மன்னர்களின் விருந்தோம்பும் பண்பு
         குறுநில மன்னர்கள் மக்களுடனும் கலைஞர்களுடனும் நெருங்கிப் பழகினர்.  இவர்கள் தன்னை நாடி வருவோர்க்கு வரையாது கொடுக்கும் பண்பினர்கள் ஆவர்.  கண்டீரக்கோப் பெருநள்ளி தனது இனக்குழுச் சமூக வாழ்வின் வழக்கப்படி வல்வில் வேடனாகக் காடுகளில் தொடர்ந்து மான் வேட்டையாடினான்.   எதிர்வந்த இரவலர்களின் பசி தீர்க்க,  தீக்கடைக் கோலால் தீயை உண்டாக்கி அதில் கொழுத்த மானின் இறைச்சி விரைவாகச் சுட்டுத் தந்தான்.   (புறம்.150:5-14)  குட நாட்டு எயினர் தந்த மான் தசையைச் சமைக்கப்பட்ட குடை போன்ற பொட்டலங்களில் வரையாது கொடுத்தவன் மல்லிகிழான் காரியாதி என்னும் மலை நாட்டு சிற்றரசன் ஆவான்.

“…………………….குட நாட்டு
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசி வெள் அமலை
வருநர்க்கு வரையாது தருவனார் சொரிய
இரும் பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர் சாலாதே” (புறம். 177: 12-17)
         
        மலைநாட்டு பெருமன்னன் அதியமான் தனக்குள்ள உணவை, இல்லாதாருக்குப் பகிர்ந்துண்ணும் இனக்குழுப் பண்பு கொண்டவன் என்பதை,

…………………………  என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோ மான்”             (புறம்.  95: 5-9)
         
           என்னும் பாடலடிகள் விளக்குகின்றன. இத்தகைய “பகிர்ந்துண்ணும் குழுப்பண்பு இனக்குழுச் சமூகப் பண்பாட்டிற்கு உரியதாகும்.   இது வேந்தரிடம் வற்றிவிட்டது;  ஆயின் மலை,  காட்டுப் பகுதி சீறூர் மன்னர்களிடம் இன்றும் காணப்படுகிறது”3  என்று குறிப்பிடுகின்றார் இராஜ்கெளதமன்.  பாரி பாணர்க்கு உன்கலம் நிறைய கள்ளை நிரப்பிக் குடிக்குமாறு விருந்தோம்பல் செய்தான். (புறம்.115:1-4) பாரியின் பறம்பு நாட்டில், தெருக்கொடியின் பூவையும், புற்றுகளில் கிடைக்கும் ஈசலையும், இனிய மோருடன் கூட்டிப் புளிங்கறி சமைக்கப்பட்டது.  புதிய திணைச்சோற்றுடன் இப்புளிங்கறி விருந்தினர்க்கு உணவாகத் தரப்பட்டது.
 
“செம்புற்று ஈயலின் இன் அளைப்புளித்து
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ”     (புறம்.  119: 3-4)         
          என்ற பாடல் இதனை மெய்பிக்கின்றது.   இதுபோலவே குமணவள்ளல் புலவர்க்கு அளித்த விருந்தோம்பல் புறநானூற்றில் விவரிக்கப்பட்டுள்ளது.   அதிலிருந்து விருந்தில் தரப்பட்ட உணவு வகைகள், விருந்து தந்த பாத்திரங்கள் அகியவற்றைப் பற்றி நன்கு அறிய முடிகிறது.   அப்போது விருந்தாக வந்தவன் பசியால் வாடினான்.   வற்றியக் குடலினை உடைய அவனுக்குக் குடற்பகுதி ‘தண்’ எனக் குளிறும்படி – நிறையும் படி – உணவு சுவையாகவும் நிரம்பவும் தரப்பட்டது.    நன்கு ஓசை கிளம்புமாறு தாளிதம் செய்யப்பட்ட கொழுமை நிறைந்த நெய்யுடைய உணவு அவனுக்குக் கொடுக்கப்பட்டது.    சிறுசிறு பொன்னாலான நல்ல கலங்களில் அந்த உணவு படைக்கப்பட்டது.  இதன்மூலம், நெய்சோறு பொற்கலங்களில் குமணனால் வழங்கப்பட்டன.   என்பதை அறியமுடிகின்றது.   (புறம், 160: 4-9)அதியமான் பொருநர்க்கு களிப்பினைத் தரும் கள்ளோடு, அமிழ்து போன்ற சுவையை உடைய ஊன் துவையலோடு கூடிய சோற்றை, வெள்ளியால் ஆகிய  வெண்மையான கலத்திலே பெய்து உண்ணுமாறு செய்து கண்டுரசித்தான் என்பதை,
 
“மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்து அன் மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி”    (புறம்.  390: 6-18)
      எனவரும் பாடல் அடிகள் மூலம் அறியலாம்.   கருபனூர் கிழான், தன்னை நாடி வரும் இரவலர்க்கு நீர் போன்று தாராளமாக நெய் ஊற்றப்பட்ட நிணம் கலந்த கொழுவிய சோற்றுணவை உண்ணக் கொடுத்து விருந்தோம்பினான்.    இதனை,
 
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
மன் நாணப் புகழ் வேட்டு
நீர் நாணநெய் வழங்கி புரந்தோன்”    (புறம்.  384: 15-18)
      எனவரும் பாடலின் மூலாம் அறியலாம்.   இவ்வுணவுப் பரிமாற்றம் என்பது தொன்மையான  ஒரு வழக்கமாகக்  கருதப்படுகின்றது.   இதன் மூலம் மக்களுடன் மன்னன் எவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளார் என்பதைக் அறிந்துக்கொள்ள முடிகின்றது.   இவர்கள் தங்களை நாடிவந்த பரிசிலர்களுக்கும் புலவர்களுக்கும் தான் வேட்டையாடி வந்த இறைச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதைச் சான்றுகள் வழி அறிந்துக்கொள்ள முடிகின்றது.

மகட்பா காஞ்சி
        சங்க காலத்தில் குறுநில மன்னரின் பெண்களை வேந்தர்கள் மணம் முடித்துத் தருமாறு வேண்டுவர்.   பெண்ணின் தந்தை விரும்பாதபோதோ மணம் முடித்துக் கொடுக்காதபோதோ போர்களும் அழிவுகளும் நிகழ்ந்துள்ளன.    குறுநில மன்னர்களின்  பெண்களை வேந்தர்கள் மணம் முடிக்க விருபுவர் என்பதை,

“வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினனே
கடவனகழிப்பி வடந்தையுஞ் செய்யான்”   (புறம்.  336) 
“கொற்ற வேந்தர் வரினுந் தற்றும்
வணங்கார்க் கீகுனவல்ல”                        (புறம்.  338) 
“தண் பணைக் கிழவனிடந்தையும் வேந்தரும்
பெறா அமையின் பேரமர் செய்தலின்”                 (புறம்.  342)
        மேற்கண்ட பாடல்களின் மூலம் அறியலாம்.    குறுநில மன்னர்களின் மகள்களை விரும்பி அடைய வந்தவர்கள் வேந்தர் எனத் தெரிய வருகிறது.   இந்த வேந்தருக்காகக் கொடை நேர்ந்தமை பற்றி புற இலக்கியங்கள் அன்றி அக இலக்கியமும் குறிப்பிடுகின்றன.    புறத்தில்  பெரும்பாலும் மகட்கொடை  மறுக்கப்படாத நிலையில் நடந்த போர்கள் பற்றியும், மறுக்கப்பட்டால் ஏற்படும் ஊரழிவுகள் பற்றியும் கூறப்பட்டு,  அப்பெண்ணின் தந்தையினது வீரமும்,  தமையனின் வீரமும் குறித்துப் பேசப்படுகின்றன.

கொடைப்பண்புகள்
       குறுநில மன்னர்களைப் பொருத்தமாட்டில் இவர்களிடம் உடைமைப் பண்பு இருந்தாலும் இவர்கள் உள்ளதைப் பகுத்துண்டு வாழும் இயல்பும் கொடைப்பண்பும் மிக்கவர்களாய் இருந்துள்ளதைப் பின்வரும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
 
“மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர்வறுமை  நோக்கின்றவன் கைவண்மையே”
               எனப் பேகனும்,
 
“மாரியன்ன வண்மைத்
தேர்வே ளாயைக் காணிய சென்றே”    (புறம்.  133: 6-7)
   என ஆயும்,

“மூவரு ளொருவன் நுப்பாகியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி 
வாழ்த்தினர் வரூஉ மிரவலரதுவே”    (புறம். 122: 5-7)    எனக் காரியும்,
 
“பறம்பு பாடின ரதுவே யறம் பூண்டு
பாரியும் பரிசில ரிரப்பின்
வாரே னென்னா வைர்வரை யின்னே”     (புறம்.  108:4-6)
எனப் பாரியும்,

ஓம்பா வீகை விறல்வெய் யோன்”      (புறம்.  152:31)         
        என ஓரியும் கொடை மாண்பு மிக்கவராய்க் காட்டப்பட்டுள்ளதை அறிய இயலும்.   மேற்கண்ட சான்றுகளின் வழி இவர்கள் உடைமைப்பொருள் அற்றோராயினும் தன்னை நாடி வந்த குடிமக்கட்கு கொடையளிக்கும் பண்பு குன்றாது காணப்பட்டனர் என்பது தெளிவு. 

குறுநில மன்னர்களின் போர்முறைகள்
        சங்க காலத்தில் முடியுடை வேந்தர்களுக்கு கீழ்பட்ட குறுநில மன்னர்கள் பலர் இருந்தனர்.   வேந்தர்களுக்கும் இவர்களுக்கும் இடையே உட்பகைக் காரணமாக பல போர்கள் நடைபெற்றுள்ளதை நாம் புறநானூற்றின் வழி அறிந்துகொள்ளமுடிகின்றது.  இத்தகைய  “உட்பகைக்கு திறை செலுத்துவதைப் புறக்கணித்தலும், மகள் மறுத்தலுமே அதிக அளவில் காரணிகளாக இருந்தன.   அதியமான்  என்ற குறுநில மன்னன் ஆண்ட தகடூரைச் சேர மன்னன்  முற்றுகையிட்டான்.   அதனையொட்டி எழுந்த  போரில் அதியமான் கொல்லப்பட்டான்”4.

         மேலும் கோவலூரை ஆட்சி செய்த மலையமானை சோழவேந்தன் கிள்ளிவளவன் தாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான்.   (அகம்.  209) இவ்விரு போர்களுக்கும் காரணம் குறுநில மன்னர்களாகிய அதியனும், மலையமானும் தாங்கள் கீழ்படிந்திருந்த சேர, சோழ வேந்தர்களின் ஆதிக்கத்தில் இருந்து விலகி,  தங்களின் தனியுரிமையை நிலை நாட்ட முயன்றமையே காரணமாகத் திகழ்ந்தது.    உண்மையிலேயே சில குறுநில மன்னர்கள் தனியுரிமைவாய்ந்த தனியரசர்களாக விளங்கினர்.   தங்கள் விருப்பத்திற்கு இணங்கவே,  பகைவர்களான இருபெரு வேந்தர்களுள் ஒருவரைத் தாங்கள் ஆதரிக்கத் துணியும் அளவிற்குத் தன்னுரிமையும், படைபலமும் பெற்றவர்களாக இவர்கள் வாழ்ந்தனர்.   தொண்டைமான் இளந்திரையன், நெடுங்காலம் தனியுரிமையுடன் தன்னாட்சி செய்துவந்தான்.   இரண்டாம் கரிகாலனின் ஆதிக்கம் வடக்கே பரவியபொழுதுதான்,  இளந்திரையனுடைய ஆட்சியுரிமை ஒரு வரம்பிற்குட்பட்டதாக அமைந்ததைப் பட்டினப்பாலை (276) நமக்குச் சான்று பகர்கின்றது.
பெருஞ்சிறப்புமிக்க குறுநில மன்னர்கள், எப்போதும் பேராற்றல் வாய்ந்தவர்களாக இருந்ததோடு, பயிற்சிமிக்க படையினை உடையவர்களாகவும், திறமைமிகு நிர்வாகிகளாகவும் இருந்தனர்.    “ஒவ்வொரு தலைவனும் சில உரிமைகள், சலுகைகள், முன்னுரிமைகள் மரியாதைப் போன்றவற்றை வேந்தர்களிடம் உரிமையுடன் கேட்டுப்பெற்றனர்.   வேந்தர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவரை அவர்கள் இந்த சலுகைகளை இன்புற அனுபவிக்கலாயினர்”5
         
          இதனால் இவர்கள் வேந்தர்களிடம் நட்புபூண்டும் அவர்களுக்கு உதவியாகவும் அவ்வப்போது போரில் ஈடுபட்டுவந்தனர் என்பதை அறியமுடிகின்றது.   அதேசமயம் மூவேந்தர்களின் ஆதிக்கத்தினை வளரவிடாமலும் தடுத்தனர் என பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது.   கரிகாலன் காலத்தில்,  அன்றைய குறுநில மன்னர்கள்  சேர, பாண்டிய வேந்தர்களுடன் சேர்ந்துகொண்டு சோழனுடைய ஆதிக்கத்தினை வளரவிடாமல் தடுக்க முயன்றனர்.    இவ்வாறே,  ’பாண்டிய வேந்தன் நெடுஞ்செழியன் ஆட்சிக்கு வந்தபோது, இருபெருவேந்தரும் ஐந்து குறுநில மன்னரும் ஒருங்கிணைந்த கூட்டணியை எதிர்த்து போரிடவேண்டியதாயிற்று.    சேர மன்னன் ஏழு சிற்றரசர்களின் முடிகளைக் கோர்த்து மாலையாக அணிந்துகொண்டதாக’ பின்வரும் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.   (பதிற்.  14:11, 16:17, 40:13, 45:6) இதன் மூலம் சங்க அடுக்கமைவுகச் சமுதாயத்தில் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கினையும், பெருவாழ்வையும் அறிந்துகொள்ள முடிகின்றது.   இவ்வாறு வேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்களுக்கிடையே பல போர்கள் நிகழ்ந்துள்ளன என்பதை இலக்கியங்கள் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.6  

முடிவுரை
       சீறூர் மன்னர் என்போர் வன்புலத்துக்குறிய சிறிய நிலத்தை ஆளும் தலைவன் ஆவர்.   இவர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து வேறுபாடு அற்ற நிலையில் வாழும் தன்மையைக் கொண்டவர்கள் என்பதையும், கொடை மற்றும் விருந்தோம்பும் பண்புகளில் சிறந்தவர்கள் என்பதையும் அறிய முடிகின்றது. சிறுகுடில்களில் வாழும் எளிய வாழ்வினர் என்பதையும் கடன் பெற்றேனும் தம் குடியினையோம்பும் பண்பினர் என்பதையும், பொருளில்லாத சூழலில் தன்னை நாடி வந்தோர்க்குத் தன் வாளைப் பணையம் வைத்தேனும்  கொடை நல்கும் பண்பினர் என்பதையும் மேற்கண்ட சான்றுகளின் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.    வேந்தர்களுக்கு உதவியாகப் போர்க்காலங்களில் படை நடத்திச் செல்லும் படைத்தலைவர்களாகவும் இவர்கள் செயல்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.   வேந்துவிடு தொழிலில் இவர்களை வேந்தர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும்,  சங்க காலச் சூழலில் மக்களோடு மக்களாக இருந்து அறவாழ்வு வாழ்ந்துவந்துள்ளனர் என்பதையும் மேற்கண்ட சான்றுகள் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.

மேற்கோள் குறிப்புகள்
1.Nilakanda Saatri, K.A., A Comprehensive History of India, Vol.   II.   P.   530.

2.தமிழ் நாட்டு வரலாறு, சங்ககாலம் – அரசியல்.   1983.   பக்.   518-519.

3.ராஜ்கெளதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், ப. 117.

4.Arokiaswami, M., The Kongu Country, p. 60.

5.Mahalingam, T.V., South Indian Polity, p. 18.

6.மாதையன், பெ., 2001 சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்.   ப. 16

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்  த. தினேஷ்,

வி.இ.டி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி,

திண்டல், ஈரோடு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here